சென்னை:உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி, தவித்து வரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி முன்னாள் நீதிபதி பி.சண்முகம் அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.
அவரை உயர் நீதிமன்றம் இந்த அறக்கட்டளைக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தேடுக்கும் தேர்தலை நடத்த கடந்த ஜூன் 2018 இல் நியமித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
முறையான கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்று பல்கலைக்கழக கல்வித் தகுதிச்சான்றிதழ்களும் பெற்று, கல்லூரிக் கல்வி இணை இயக்குனரால் பணிநியமன ஒப்புதல் பெற்று கடந்த ஆறு (6) ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஆறு (6) அரசு உதவிபெறும் கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு “உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது” என்று “Show Cause notice” வழங்கியுள்ளார்.
மேலும் பேராசிரியர்கள் விளக்கம் தர அரசின் விதிமுறைகளின் படி கால அவகாசம் தராமல் பணி நீக்க உத்தரவை கொரோனா காலகட்டத்தில் 152 பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கும் வழங்கிள்ளார்.
பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த இடைக்கால நிர்வாகியின் சட்டவிரோத போக்கை கண்டித்தும், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்ட விதிகள் (Tamilnadu Private Colleges Regulations Act) 1976-க்கு எதிராக செயல்படும் முன்னாள் நீதிபதி பி.சண்முகம் அவர்களின் செயல்களை கண்டித்தும், பணி நியமண ஆணையை ரத்து செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கடந்த இரண்டு நாட்களாக புதன் மற்றும் வியாழன் (30.09.20 & 01.10.20) அந்தந்த ஆறு (6) உறுப்பு கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது என்று சங்கத்தின் செயலாளர் முனைவர் கோகுல்ராஜ் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்ட விதிகள் 1976-க்கு எதிராகவும், அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் தன்னிச்சையாக செயல்படும் இடைக்கால நிர்வாகியின் இந்த செயலுக்கு கொ.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி, சென்னை (CKNC, Chennai) வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்த கல்லூரியை சார்ந்த பேராசிரியர்கள் தங்களின் ஆதரவை தந்து போராட்டம் நிறைவுபெற்றது. இறுதியாண்டு தேர்வு நடைபெற்றதால் இந்த போராட்டம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெறுவதாக இருந்தது தற்போது நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் நலன் கருதி இறுதி ஆண்டு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இருந்ததால் சென்னை பல்கலைக்கழகம் விடைத்தாள் திருத்தும் பணிக்கும் எந்த தடையும் வராமல் இருக்குமாறு போராட்டத்தில் பங்கு பெற்ற பேராசிரியர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினார்கள் என்று CKNC -AUT சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் பங்குபெற்ற பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டமானது முழுமையாக தமிழ்நாடு அரசின் சமூக இடைவெளி மற்றும் covid-19 விதிமுறைகளை கடைபிடித்து நடத்தியது என்பதை பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
