சென்னை :பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் வரதன் அவர்கள் கூறியதாவது:
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உயிரிழந்த 450க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு இதுவரை எந்தவொரு நிவாரண நிதியும் வழங்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து, வழக்கறிஞர்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதாக பார் கவுன்சில் தலைவர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தார்
மேலும் பார் கவுன்சில் நிர்வாகம் வழக்கறிஞர்கள் நலனில் அலட்சியமாக செயல்படுகிறது. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பது போல பார் கவுன்சில் செயல்படுகிறது.
அமைப்பு ரீதியான அறிவிப்புகள் கூட வாட்ஸ்-அப்களில் வருகிறது.
பார் கவுன்சிலில் நிதி ஆதாரங்கள் இல்லை. ஆனால், அவற்றை பெருக்குவதற்கான வழிமுறைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த ஒன்றரை வருடங்களில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த ஒரு வழக்கறிஞரின் குடும்பத்துக்குக் கூட இதுவரை எந்த நிவாரண நிதியும் சென்றடையவில்லை.
நிவாரண நிதி குறித்தும், இளம் வழக்கறிஞர்களின் சேமநல நிதி குறித்தும் பார் கவுன்சிலுக்கு எழுதிய மூன்று கடிதங்களுக்கும் இதுவரை பதில் இல்லை.
இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக அகில இந்திய பார் கவுன்சிலுக்கு புகார் கொடுக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர் கள் உடனிருந்தனர்.
