சிவகாசி:
சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து 1303 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிவகாசி ஆஸ்கார் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் சேர்மன் திரு.நாராயணசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் தலைவர் டாக்டர்.ரெஸ்மி பிரவீன் அவர்கள் தலைமை வகித்தார். ஆஸ்கார் கல்லூரியின் பேராசிரியர் திரு.தங்க முனீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் திரு.செல்வராஜ் , கண்மருத்துவர்கள் டாக்டர் ஜனனி விக்னிதா, டாக்டர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனத்தலைவரும், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான உலக சாதனையாளருமான நேத்ரா ஸ்ரீ டாக்டர் ஜெ.கணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கண்தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நேத்ரா ஸ்ரீ டாக்டர் ஜெ.கணேஷ் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் தேசிய கண்தான இரு வார விழிப்பணர்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை பொதுமக்கள் மத்தியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இறந்த பிறகு கண்தானம் செய்வதை ஊக்குவிக்கவும் மத்திய அரசால் இது நடத்தப்படுகிறது. சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும், கண்தானம் செய்ய இறந்தவரின் சம்மதம் தேவை இல்லை என்றும், உறவினர்களின் சம்மதம் இருந்தாலே கண்தானம் வழங்க முடியும் என்றார்.
மேலும் ஒருவர் கண்தானம் வழங்கினால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் மற்றும் கண்தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு மாணவ-மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்று கூறினார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் தலைவர் டாக்டர்.ரெஸ்மி பிரவீன் அவர்கள் கூறுகையில், கண்ணில் அடிபடுவதாலும், தொற்று நோயினாலும் சத்துணவு முக்கியமாக வைட்டமின்-ஏ குறைவினாலும் கரு விழி பாதிக்கப்படலாம். இந்த பாதிக்கப்பட்ட கருவிழியை அகற்றி விட்டு இறந்தவரின் கண்ணில் இருக்கும் ஆரோக்கியமான கருவிழிளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவிகளாகிய அனைவரும் நீங்கள் உங்களது வீட்டிலோ, வீட்டிற்கு அருகில் மரணம் ஏற்பட்டாலோ அவர்களிடம் கண்தானம் பற்றி எடுத்துக் கூறி கண்தானம் பெற உதவி செய்யுங்கள் என்றார்.

கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஆஸ்கார் கல்லூரியின் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சுரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஆஸ்கார் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் ஆஸ்கார் கல்லூரி பேராசிரியர் திருமதி.ரம்யா அவர்கள் நன்றியுரை நல்கினார்.