சென்னை: ‘சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026’ (CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026) நிகழ்வு அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுக நிகழ்வில் இந்திய மோட்டார் ரேஸிங் விளையாட்டுத் துறையின் முன்னணி பிரமுகர்கள், அரசுப் பிரதிநிதிகள், பந்தய அணிகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், எஃப்ஐஏ (FIA) சர்வதேச கார்ட்டிங் கமிஷனின் தலைவரும், எஃப்ஐஏ உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உறுப்பினருமான திரு. அக்பர் இப்ராஹிம், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்கள் கூட்டமைப்பின் (FMSCI) தலைவர் திரு. அரிந்தம் கோஷ், சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) – ன் இயக்குனர் டாக்டர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த், ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குனர் திரு. ஸ்ரீனிவாசு அல்லாபன், எஃப்எம்எஸ்சிஐ கவுன்சிலர்கள், போட்டியிடும் அணிகள் மற்றும் பல முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த அறிமுக நிகழ்வு, வரவிருக்கும் 2026 சாம்பியன்ஷிப் தொடர் மீதான முன்னோட்டத்தை வழங்கியதோடு, இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் ரேஸிங் சேம்பியன்ஷிப் – ஐ வலுப்படுத்தவும், நாட்டின் மோட்டார் விளையாட்டு சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) மற்றும் ஜேகே டயர் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த குறிக்கோளையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.
1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் தொடரானது நாட்டின் மிக முக்கிய சர்க்யூட் பந்தயமாகவும், புதிய மோட்டார் விளையாட்டுத் திறமைகளை உருவாக்கும் முதன்மையான களமாகவும் உருவெடுத்துள்ளது. கடந்த முப்பதாண்டுகளாக இதன் வளர்ச்சி மற்றும் பரிணாமத்தில் டயர் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் ஜேகே டயர் நிறுவனம் மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது. நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா படேல் மற்றும் குஷ் மைனி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பந்தய வீரர்களின் ரேஸிங் பயணத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இப்போட்டித் தொடர் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரேஸிங் போட்டியில் புதியப் பிரிவுகள், சர்வதேசத் தரம் வாய்ந்த நவீன ரேஸிங் வாகனங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை போன்ற போட்டி வடிவமைப்புகள் மூலம் இந்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.
இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போன்ற முன்னணி பந்தயத் தொடர்களில் தனது ஈடுபாட்டின் வழியாக பங்கேற்று இந்திய மோட்டார் ரேஸிங் விளையாட்டுத் துறையில் சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) நிறுவனம் உத்வேகம் மிக்க பங்கேற்பாளராக செயல்பட்டு வருகிறது. ஜேகே டயர் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் இந்த முதன்மை சர்க்யூட் பந்தய போட்டியை மேலும் வலுப்படுத்துவதும், வளர்ந்து வரும் இளம் மோட்டார் ரேஸிங் வீரர்களை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026, இந்த மகத்தான பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, நாட்டின் முன்னணி ஓட்டுநர்கள், அணிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றுதிரட்டி, பங்கேற்கச் செய்வதன் மூலம் பரபரப்பிற்கு குறைவில்லாத மற்றுமொரு விறுவிறுப்பான மோட்டார் பந்தய சீசனை வழங்கவுள்ளது.
தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் பேசுகையில், “நாட்டில் மோட்டார் ரேஸிங் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கும், அதே வேளையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிடிஆர் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்கள் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்பிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குனர் திரு. ஸ்ரீனிவாசு அல்லாபன் அவர்கள் பேசுகையில், “சுமார் முப்பது ஆண்டுகளாக, இந்திய மோட்டார் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி மீது ஜேகே டயர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டின் மையப்புள்ளியாக ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி எப்போதும் இருந்து வருகிறது. பல தலைமுறைகளாக திறமையான மோட்டார் பந்தய வீரர்கள் இதில் பங்கேற்று, தங்களது திறன்களை வளர்த்துக்கொண்டு, இந்த விளையாட்டில் உயர் சாதனைகள் படைக்க இத்தொடர் சிறந்த வாய்ப்பளித்துள்ளது. 2026 சீசனை எதிர்நோக்கும் இந்த வேளையில், சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் எஃப்எம்எஸ்சிஐ ஆகிய அமைப்புடன் இணைந்து இந்த வலுவான அடித்தளத்தை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புதிய திறமையாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும், போட்டிகளின் தரத்தை உயர்த்தவும், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையின் தொடர் வளர்ச்சிக்குக் பங்களிக்கவும் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
தொடக்க விழாவில் சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) இயக்குனர் டாக்டர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த் பேசுகையில், “சிறப்பான பாரம்பரியத்தை தொடர்ந்து தக்கவைப்பது மட்டும் எமது நோக்கமல்ல. அந்தப் பெருமையையும், பாரம்பரியத்தையும் மேலும் வலுப்படுத்தி, உயர்த்துவதே எமது திட்டம். இந்த சாம்பியன்ஷிப் தொடரின் 29-வது சீசனை இதற்குமுன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்; அதிக ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை பரவலாக வெளியிடும்; லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் பசுமையான நினைவுகளைப் பதித்து, மறக்க முடியாத சீசனாக இது இருக்கும். இது வெறுமனே எங்களது தொலைநோக்கு இலட்சியம் மட்டுமல்ல; துல்லியமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டமாகும்.” என்று கூறினார்.
எஃப்ஐஏ உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் கமிஷனின் தலைவருமான திரு. அக்பர் இப்ராஹிம் அவர்கள் பேசுகையில், “மோட்டார் விளையாட்டுத் துறையில் முதலீடு செய்து அதனைத் தீவிரமாக ஊக்குவிக்கும் ஒரு குழுவை அமைப்பது அவசியமானது; மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த விளையாட்டை மேலும் வளர்க்க ஜேகே டயர் மற்றும் சிடிஆர் போன்ற அமைப்புகள் தொடர்ந்து ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டும். இந்திய மோட்டார் விளையாட்டு உலகளாவிய ரீதியில் சர்வதேச அமைப்பான எஃப்ஐஏ-வால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய மோட்டார் பந்தய துறைக்கு இந்தியாவும் மிக முக்கிய நாடாகும். அனைத்து வகையான மோட்டார் விளையாட்டுகளிலும் பல சாதனைகளைப் படைத்த நாட்டின் மக்களாக இருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். இவ்விளையாட்டுத் துறையில் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் நாம் முன்னணி இடத்தில் இருக்கிறோம்” என்றார்.
பந்தயத் தொடரின் முதல் சுற்று கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் செப்டம்பர் 11 அன்று தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும். சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்று போட்டிகள் டிசம்பர் 11 முதல் 13 வரை சென்னைக்கு அருகிலுள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறும். நாட்டின் முதலாவது சர்வதேச மோட்டார் பந்தயம் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தளத்தில்தான், 2026-ஆம் ஆண்டின் புதிய தேசிய சாம்பியன்கள் வெற்றி மகுடம் சூட உள்ளனர்.
உத்தேச பந்தய அட்டவணை:
சுற்று
தேதிகள்
அமைவிடம்
01
11 – 13 செப்டம்பர் 2026
காரி மோட்டார் ஸ்பீட்வே, கோவை, தமிழ்நாடு
02
23 – 25 அக்டோபர் 2026
காரி மோட்டார் ஸ்பீட்வே, கோவை, தமிழ்நாடு
03
13 – 15 நவம்பர் 2026
ப்ரென் ரேஸ்வே, பெங்களூரு, கர்நாடகா
04
11 – 13 டிசம்பர் 2026
மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், சென்னை, தமிழ்நாடு
சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டின் மிகச்சிறந்த பந்தயத் திறமைகளை மீண்டும் ஒரே மேடையில் கொண்டு வந்து, தனது பாரம்பரிய பந்தயச் சிறப்பையும் திறமைகளை வெளிக்கொணரும் சேவையையும் தொடர்கிறது. சுமார் மூன்று தசாப்த காலப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இத்தொடர், இந்திய சர்க்யூட் பந்தயங்களின் தூணாகவும், அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்கி நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வித்திடும் முக்கிய தளமாகவும் தொடர்ந்து இயங்குகிறது.
ஜேகே டயர் மோட்டார் ஸ்போர்ட் பற்றி:
ஜேகே டயர் நிறுவனம் சுமார் முப்பது ஆண்டுகளாக மோட்டார் விளையாட்டு உலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, இந்தியாவில் இத்துறையை அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. உலகத் தரம் வாய்ந்த பந்தயத் தளங்களை உருவாக்குவதன் மூலமும், உள்ளூர் பந்தய வீரர்களை ஊக்குவிப்பதன் மூலமும் மோட்டார் பந்தயங்களை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற இந்நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், குஷ் மைனி, அர்ஜுன் மைனி மற்றும் அனிதித் ரெட்டி உள்ளிட்ட பல முன்னணி இந்திய பந்தய வீரர்கள் சாதனை படைக்க உதவியுள்ளன. மேலும், ஜேகே டயர் டபிள்யூஐஏஏ ‘வுமன்ஸ் ரேலி டூ தி வேலி’, ஜேகே டயர் ‘டிஃபென்ஸ் வைவ்ஸ் பவர் டிரைவ்’, ஜேகே டயர்-ஒய்எஃப்எல்ஓ ‘வுமன்ஸ் பவர் டிரைவ்’ மற்றும் ஜேகே டயர் டைம்ஸ் ‘வுமன்ஸ் டிரைவ்’ போன்ற சிறப்பு முயற்சிகள் மூலமாகவும், தேசிய பந்தய சாம்பியன்ஷிப்பில் முற்றிலும் பெண்கள் மட்டுமே கொண்ட அணியை அறிமுகப்படுத்தியதன் மூலமாகவும் மோட்டார் விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பையும் இந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது.
சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) பற்றி:
சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) என்பது ஒரு தொழில்முறை மோட்டார் விளையாட்டு அணியாகவும், பந்தயத் திறமைகளை வளர்ப்பதற்கும், ஆரம்ப நிலை முதல் தொழில்முறை பந்தயங்கள் வரையிலான கட்டமைக்கப்பட்ட பாதையை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். 2022 முதல் இந்தியன் ரேசிங் லீக்கில் ஒரு பிராஞ்சைஸ் அணியாகவும், 2023-ல் அறிமுகமான ஆண்டிலேயே எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அணியாகவும் சிடிஆர் விளங்குகிறது. ரேஸிங் ஓட்டுனர் மேம்பாடு, கார்ட்டிங், தொடக்கநிலை பந்தயங்கள், ரசிகர்களை ஈர்த்தல் மற்றும் மோட்டார் பந்தய விழிப்புணர்வு போன்ற பல முயற்சிகளை இது முன்னெடுத்து வருகிறது. இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பில் (FMSCI) பதிவு செய்யப்பட்டுள்ள சிடிஆர்-இன் பரந்த விளையாட்டுத் திட்டமான ‘சிடிஆர் யூனிஃபைட்’ (CTR Unified), பல பந்தயப் பிரிவுகளில் உள்ள அணிகளை ஒரே ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் கொண்டுவருகிறது.
எஃப்எம்எஸ்சிஐ (FMSCI) பற்றி:
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு (FMSCI) என்பது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மோட்டார் விளையாட்டு அமைப்பாகும். இது சர்வதேச எஃப்ஐஏ (FIA) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்பாகும். நாட்டில் உள்ள அனைத்து நான்கு சக்கர மற்றும் இரு சக்கர மோட்டார் பந்தயங்களையும் FMSCI நிர்வகித்து நடத்துகிறது; பந்தய நிகழ்வுகள் மற்றும் சர்க்யூட்டுகளுக்கு அனுமதி வழங்குகிறது. எஃப்ஐஏ-ன் சர்வதேச நிர்வாக அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதியாக இது செயல்படுகிறது. எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் என்பது எஃப்எம்எஸ்சிஐ-ன் முதன்மையான நான்கு சக்கர சர்க்யூட் பந்தய செயல் திட்டமாகும்.
கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
பூஜா சௌத்ரி | 98205 15445 | sports@conceptpr.com
முருகன் ஜி | 98412 78904 | murugan.g@conceptpr.com
