சென்னை: தேசிய தீயணைப்புப் பணி (சேவை) தினம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி,தீயணைப்பு துறையுடன் இணைந்து பேரிடர் காலத்தில் பொதுமக்களை எப்படி காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதுகலை வளர்ச்சியியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பேரிடர் காலத்தில் மக்களை மீட்டெடுக்க எப்படிச் செயலாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் மாணவர்களிடையே காட்சியாக நடித்துக் காட்டினர்.

மேலும் இந்நிகழ்வின் போது தேசிய தீயணைப்புப் பணி (சேவை) தினத்தின் வரலாறு குறித்த காணொளியைக் கல்லூரி மாணவர்கள் தயாரித்துத் திரையிட்டது பெரிய வரவேற்பைப் பெற்றது.
முதுகலை வளர்ச்சியியல் துறையில் ‘பேரிடர் மேலாண்மை’ பற்றிய பாடத்தைப் பயிற்றுவிப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடத்திட்டம் பேரிடர்கள் தேசத்திற்குப் பொருளாதார இழப்புகளையும், முன்னேற்றத்தில் பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு அம்சங்கள் பற்றிய வளர்ச்சிக்கான செயல்முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜா சாமுவேல் உள்ளிட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

