சென்னை:கிராம பஞ்சாயத்து சட்டம் மூலம் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என மூன்றடுக்குகள் கொண்டதாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மத்திய – மாநில அரசுகளுக்கு நிகரான ஓர் அங்கீரகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக அவரது கனவை நிறைவேற்ற, அவரது மறைவிற்குப் பிறகு 1993 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் 73-வது பஞ்சாயத்து ராஜ் அரசமைப்புச் சட்டத் திருத்தமாகும். அதனடிப்படையில் தமிழக ஊராட்சிகள் சட்டம் 1994 இல் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பட்டியலின. பழங்குடி மக்களுக்கென மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதோடு. மொத்த பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த புரட்சிகரமான திட்டமாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது மொத்தமுள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 456 பதவியிடங்களுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஒதுக்கீட்டின்படி பட்டியலின மக்கள் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அதில் செயல்படுவதற்கு பல்வேறு தடைகளை சில ஜாதிய சக்திகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 15 மாவட்டங்களில் 21 தலித் பிரதிநிதிகள் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரக்கோணம், தென்காசி பகுதிகளில் நடைபெற்றது மிகுந்த வேதனைக்குரியது. குறிப்பாக அரக்கோணம் பகுதியில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கீதா என்பவரை செயல்பட விடாமல் துணைத் தலைவர் நடந்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அதேபோல, தென்காசி பகுதியில் ஊதுமலை பஞ்சாயத்து தலைவர் வளர்மதி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சம்பவங்கள் தேனி, மதுரை, சிவகங்கை, திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், திருவள்ளுர், கோவை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் பஞ்சாயத்து அமைப்புகளில் தலித்துகள் பதவியேற்று செயல்படுவதற்கு இருக்கிற தடைகளை களைவதற்கு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசியல் சட்டத்தை நாட்டிற்கு வழங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து அவருக்கு மணிமண்டபத்தில் முழு திருவுருவச் சிலையை திறந்து வைத்தவர் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். அதேபோல, தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தவர் என்பதை எவரும் மறந்திட இயலாது.

2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொறுப்பேற்ற போது துணை முதலமைச்சராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது தமிழ்நாடு பஞ்சாயத்து இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 2006 இல் நிறைவேற்றி பட்டியலின. பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாத்தார். அத்திருத்தத்தின் அடிப்படையில் தான் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து நாட்டார்மங்கலம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டாகச்சியேந்தல் ஆகிய நான்கு ஊர்களில் தேர்தலை நடத்தி தலைவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாத்தவர் இன்றைய முதலமைச்சர். அதுமட்டுமல்லாமல், சென்னை கலைவாணர் அரங்கில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் விழா நடத்தி பதவியேற்பு விழா நடத்தியவரும் நமது முதலமைச்சர் தான்.

எனவே. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின விழா. குடியரசு தின விழா போன்ற நாள்களில் கிராமசபைகள் நடத்துவதை கட்டாயமாக்கி இன்றைக்கு அது நடைபெற்று வருகிறது. அத்தகைய விழாக்களில் பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிற உரிமையை பெற்றிருக்கிறார்கள். அத்தகைய சூழல் தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டு பட்டியலின மக்களின் பாதுகாவலராக செயல்படுவதோடு. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவராக செயல்பட்டு மத. சமூக நல்லிணக்கத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் நடக்கிற தலித் விரோத நடவடிக்கைகளை குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் சில ஜாதிய சக்திகளால் நடத்தப்படுகிற அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக முதலமைச்சர் ஒடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.