சென்னை:
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள சென்னை சமூகப்பணி கல்லூரியின் முதுகலை சமூகப்பணி மாணவர்கள், தங்களது திட்ட களப்பணியின் ஒரு பகுதியாக, “துப்புரவுப் பணியாளர்களிடையே தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்” என்ற தலைப்பில் துப்புரவுப் பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

இத்திட்ட பணியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களைச் சந்தித்து, எழும்பூர், சவுகார்பேட்டை மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில், ஐந்தாம் மண்டலத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். பணியாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் அன்றாட பணிச்சூழல், தொழில்சார் சுகாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை மாணவர்கள் சேகரித்தனர்.
பணியாளர்களின் முக்கியப் பிரச்சினைகள் கண்டறிதல்
களப்பணியின் போது துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மாணவர்களால் அடையாளம் காணப்பட்டன. இப்பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் அவசர உதவி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் விநியோகித்தனர். முக்கியமான தொலைபேசி எண்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிதிக் கல்வி விழிப்புணர்வு
திட்டப்பணியின் மற்றொரு பகுதியாக, சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் எழும்பூர் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களுக்கான நிதிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எழும்பூர் அஞ்சல் நிலைய மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, துப்புரவுப் பணியாளர்களுக்கு சேமிப்பு, வங்கிச் சேவைகள், நிதித் திட்டமிடல் மற்றும் அரசின் நிதி சார்ந்த திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டது.
பணியாளர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை முறையாகச் சேமிப்பதன் அவசியம், வங்கிக் கணக்குகளின் பயன்பாடு, பாதுகாப்பான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக நிதியைத் திட்டமிடுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கான தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துப்புரவுப் பணியாளர்கள் தங்களது பணியின்போது எதிர்கொள்ளக்கூடிய தொழில்சார் சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர். குறிப்பாக, பணியின் போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்துதல், கைஉறைகள் மற்றும் முகக்கவசங்களை அணிதல், பாதுகாப்புக் காலணிகளைப் பயன்படுத்துதல், கழிவுகளைக் கையாளும் போது பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் பணிக்குப் பிறகு தனிநபர் சுகாதாரத்தைப் பேணுதல் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், பணியின்போது ஏற்படக்கூடிய காயங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பிற உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்யாமல் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணியில் எதிர்கொள்ளும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் அவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான பணிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
சமூகப்பணி மாணவர்களின் நோக்கம்
துப்புரவுப் பணியாளர்கள் நகரின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். அவர்களின் தொழில்சார் உடல்நலம், பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிதி நலனை மேம்படுத்துவதற்கான தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இத்திட்டப்பணியின் முக்கிய நோக்கமாகும்.

சென்னை சமூகப்பணி கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்களின் இந்த களப்பணி, துப்புரவுப் பணியாளர்களின் குரலை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான ஒரு சமூகப்பணி முயற்சியாக அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தூய்மைப் பணியாளர்களுக்கான பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
