சென்னை :உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும். இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.
வீடற்ற அந்த குழந்தைகள் விவசாயம் சார்ந்த வேலைகள், சாலைகளில் பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். டெல்லியில் மட்டும் 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை சாலையோராம் வசிப்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் என பல லட்சகணக்கனோர் உணவின்றி நாள்தோறும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தவித்து வருகின்றனர்.
இப்படி தவித்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் உணவுகளை தானமாக தமிழகம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வருகின்றனர். இதன் மூலம் இந்த குடும்பங்கள் தங்களது வயிற்றுப் பசியாற்றி வரும் நிலையில் , தானமாக உணவு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு திடீரென என நேற்று தடை விதித்துள்ளது இந்த தடை உத்தரவால் தானமாக உணவு எதிர்பார்த்துகாத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு , இனி இவர்களுக்கு உணவு கிடைப்பதை அரசு எப்படி உதவி செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மக்களின் பசியாற்ற தானமாக உணவு அளித்து வருபவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஆகவே உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வரும் காலங்களிலும் தானமாக உணவு வழங்க அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில்வி.எம்.எஸ். முஸ்தபா தெரிவித்தார்.