நெல்லை: 39 வது தேசிய கண்தான இரு வார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த விஞ்ஞானியும்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தள இயக்குனருமான ஜாய் பி. வர்கீஸ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கும்,கண் தானம் எடுக்க உதவி புரிந்தவர்களையும் கௌரவித்தார்.

மேலும் இந்த விழாவில் 4585 ஜோடி கண்தானம் பெற்று உலக சாதனை புரிந்த அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கும், பாவூர்சத்திரத்தில் 380 ஜோடி கண்களை தானமாக பெற்ற பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் அரிமா.இளங்கோ அவர்களுக்கும் சிறந்த விஞ்ஞானி ஜாய் பி. வர்கீஸ் அவர்கள் “அரவிந்த் கண் ரத்னா விருது” வழங்கி கௌரவப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.ரேவதி பாலன், டாக்டர் வி ராமலட்சுமி, இந்திய மருத்துவக் கழக சங்க தலைவர் டாக்டர் என். சுப்பிரமணியன், ரோட்டரி சங்க தலைவர் எ. ராமகிருஷ்ணன், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.சுதந்திர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் ஆர். மீனாட்சி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் கருவிழி பிரிவு மருத்துவர் டாக்டர் திவ்யன் ஆபிரகாம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.