எழும்பூர்:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் இக்சா மையம் அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே. இளமாறன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். அதன்படி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், அன்பழகன் திட்டம் போன்றவற்றிக்காக தமிழக அரசுக்கு நன்றியையும், பொருளாதார விலை உயர்வு காரணமாக, மத்திய அரசின் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், காலை சிற்றுண்டியை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடுவதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கடந்த 3 மாதமாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் ஆசிரிய,ஆசிரியை களுக்கு முறையாக உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்குவதுடன், மாணவர்களின் ஒழுக்கம் குறித்து மாணவர்களின் சான்றிதழில் பதிவு செய்வது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

ஆசிரியர்களாக நாங்கள் அவர்களை திருத்தி நல்வழி படுத்துவோம். மாற்று சான்று அறிவிப்புகள் குறித்து தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
மாணவ,மாணவிகளின் ஒழுங்கீன நடவடிக்கை தொடர்பாக சான்றிதழில் பதிவு செய்தால், மாணவர்கள் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும்.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் மீது தேவையின்றி வதந்திகள் பரப்புகின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.