சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய மனித நேயமிக்க 150 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நிகழ்வு!
சிவகாசி:
சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய 150 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி லயன்ஸ் காஸ்மாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனர் டாக்டர்.ஜெ.கணேஷ்
அவர்கள் தலைமை தாங்கினார். சாத்தூர் துணை சேர்மன் பி.அசோக் மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா மாவட்ட ஆளுநர் அரிமா.பிரான்ஸிஸ் ரவி அவர்கள் கண்தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்: இறந்து போன ஒருவருடைய கண்களைத் தானம் செய்யும் குடும்பத்தினர் மனித நேயம் மிக்கவர்கள் என்றார். கண்தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும் உறவினர்கள் சம்மதம் இருந்தாலே கண்தானம் செய்யலாம் என்றார். கண்தானம் பெறுவதையே தனது முழுநேர சேவையாக செய்து வருபவரும் எங்கு ஒரு கண்தானத்திற்கு அழைப்பு வந்தாலும் உடனே சென்று எடுத்து வரும் டாக்டர்.ஜே.கணேஷ் அவர்களை பாராட்டி இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு புத்தகம் சார்பாக வழங்கப்பட்ட கேடயத்தினை வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலி, அரவிந்த் கண்மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு கண் வங்கியின் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ஒருவரிடமிருந்து பெறப்படும் ஒரு ஜோடி கண்களை நான்கு பேருக்கு அளிக்கப்படும் இது மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியாகும். கண்ணாடி அணிந்தவர்கள். கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள், இரத்த அழுத்த நோயாளிகள் ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகளும் கண்தானம் வழங்கலாம் என்றார்.
கண்தான மாவட்ட தலைவரும் சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளையின் சேர்மனுமான டாக்டர்.ஜெ.கணேஷ் கூறுகையில்: தானத்தில் சிறந்தது கண்தானம் ஆகும். இறந்த பின்னர் ஒருவரிடமிருந்து பெறப்படும் கண்கள் நான்கு நபர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. நமது மாவட்டத்தில் எங்கு ஒரு கண்தானத்திற்கு அழைப்பு வந்தவுடன் விரைவாக அந்த இடத்திற்கு சென்று அவர்களது கண்களை அகற்றி கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறேன். இறந்தவர்களின் கண்களை எடுப்பதற்கு செய்தியை உடனே எனக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகமாக மாணவ, மாணவிகள் உதவி புரிந்து வருகிறார்கள்.
இதுவரை 4560 ஜோடி கண்களை தானமாக பெற்றுள்ளேன். தமிழ்நாடு, பாண்டிச்சேரி முதலிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் 1256 கண்தான விழிப்புணர்வுகளை நடத்தியுள்ளேன். அதன் பலனாக தமிழ்நாடு கண்தானம் பெறுவதில் இரண்டாவது இடமும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும். உள்ளது.
மேலும் அவர் கூறியதாவது: கண்தானம் செய்யும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மனிதநேயமிக்கவர்களாக இருந்ததனால் தான் இந்த விழாவில் சாலை விபத்தில் இறந்த வந்து சிறுவர்களின் கண்களைகூட கண்தானம் பெற முடிந்தது என்றார். இந்த சேவைக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை சங்கங்களின் அமைப்புகள் மூலம் 265 விருதுகளை பெற்றுள்ளேன் என்றார்.
மேலும் இந்த விழாவில் கண்தானத்திற்கு உதவி புரிந்த 4 சமூக சேவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதினை வழங்கினார்கள். சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா மணிகண்டன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
