சென்னை: பொன்னேரி சமத்துவபூமி அறக்கட்டளை – விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில்

விளிம்புநிலை மக்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சமூகப்பணிக் கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் கலையரங்கத்தில் வெகு சிறப்பாக நடந்தது.

துவக்க நிகழ்வாக குத்துவிளக்கேற்றித் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில் இளநிலை சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் சு. சுடர்மதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் மாண்புமிகு சிறுமான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி கூடுதல் சிறப்பு சேர்த்தன.

பணிநிறைவு பெற்ற மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலெட்மி அவர்கள் தனது உரையில் மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை விளக்கி சொல்லியதுடன், அதற்கு எதிரான முயற்சிகளில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பணிநிறைவு பெற்ற புதுவைப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியர் முனைவர் ஆர். செல்லபெருமாள் தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியினரைப் பட்டியலிட்டதுடன், அவர்களின் இயற்கை வாழ்வியல் சார்ந்த வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தார்.

மேலும் அடித்தட்டு மக்களுக்கு எங்காவது ஓர் இடம் கிடைத்தாலும் கிடைக்கலாம், ஆனால் விளிம்புநிலை மக்களான பழங்குடியினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவருக்கு எங்கும் இடமில்லை என்கிற மோசமான இந்த போக்கு மாற வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார்.

ஆஸ்திரேலியா, சிட்னியிலிருந்து வருகை புரிந்த டாக்டர். இரகுபதி சந்திரசேகர் மற்றும் சீனா, பெய்ஜிங் அயல்மொழிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கட்டுரையாளர்களின் முயற்சியைப் பாராட்டி மனதார வாழ்த்தினர்.

இந்தத் தலைப்பில் இன்னும் ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆய்வுக் கட்டுரைகளில் பழங்குடிகள் குறித்த தலைப்புகள் முதல் அமர்விலும், மாற்றுப் பாலினத்தவர் குறித்த தலைப்புகள் இரண்டாம் அமர்விலும் வாசிக்கப்பட்டன.

இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டவர்கள் கட்டுரையாளர்களிடம் தங்கள் சந்தேகங்களைக் கேள்விகளாக எழுப்பித் தெளிவு பெற்றனர்.

தமிழ்நாடு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல பல்கலைக்கழங்களிலிருந்தும் பெறப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சமூகவியல் பார்வையுடன் கட்டுரையாளர்களின் அரிய முயற்சியின் மூலம் எழுதப்பட்டுள்ளன.
சுமார் 150 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆய்வுக் கோவைகளாக வெளியிடப்பட்டன.

இக்கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிறைவு விழாவில் தொகுப்புரை நிகழ்த்திய இளநிலை சமூகப்பணித் துறைப் பேராசிரியர் ஜெ. சேவியர் விவேக் ஜெர்ரி கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச. அண்ணாதுரை பழங்குடியின மக்களின் பேராசை இல்லாத தன்னிறைவு வாழ்வு குறித்து விளக்கி பேசினார்.

அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தர போதுமான திட்டங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

மதுரை, திருநங்கையர் மற்றும் திருநம்பிகள், ஆவண மைய இயக்குநரும் எழுத்தாளருமான பிரியா பாபு அவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மூன்றாம் பாலினம் குறித்த பதிவுகளைப் பட்டியலிட்டதுடன், மூன்றாம் பாலினம் குறித்த அன்றைய சமூகத்தின் புரிதலையும் விரிவாக அலசினார். இவரின் ‘இடையினம்’ என்ற நூல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது.

ஆய்வறிஞர் அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைத் தனது உரையின் வழியாகப் படம் பிடித்துக் காட்டினார்.
சென்னை சமூகப்பணிக் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் அ. திருமகள் ராஜம், முனைவர் சி.ஆர். மஞ்சுளா, சமத்துவபூமி அறக்கட்டளைத் தலைவர் ம. அனிதா, விசாலட்சுமி பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் கி. அய்யப்பன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்த விழாவைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தார் பேராசிரியர் முனைவர் தேவராஜன்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பழங்குடியின மாணவர்களுக்கும், மாற்றுப் பாலின மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த ஆய்வறிஞர்களுக்கு சமத்துவ ஆய்வறிஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூல் ஆய்வு – கள ஆய்வு வழி கண்டறியப்பட்ட உண்மைகளைக் கட்டுரை வடிவில் கேட்ட கல்லூரி மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் ஆதிவாசிக்கும் – வந்தவாசிக்குமான விளக்கங்களையும் உணர்ந்து கொண்டனர்.