விழுப்புரத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். பெண்கள் மத்தியில் அநாகரீகமாக பேசிய அமைச்சர் பொன்முடியை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்து சேவை குறித்தும், அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் பயணம் செய்வதாக பெண்களை பொதுநிகழ்ச்சியில் பேசினார். அதே போன்று கிராம சபை கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட போது, தொகுதி பிரச்னை குறித்து பெண்மணி ஒருவர் பேசினார். அப்போதும் அந்த பெண்மணியிடம் அமைச்சர் பொன்முடி நீ எல்லம் எனக்கு ஒட்டு போடவில்லை என பேசியிருந்தார்.

இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அநாகரீகமாக அமைச்சர் பொன்முடி செயல்பாடு அமைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட நபர்களால் தமிழகத்தின் மீதான நன்மதிப்புக்கிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடி கடந்த சில தருணங்களில் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதற்காக கண்டனங்கள் எழுந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கட்சியின் மேடையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இருந்த போதிலும் தொடர்ந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேசியுள்ள பொன்முடி அமைச்சர் பதவிக்கே தகுதியில்லாதவர். பொன்முடியை தமிழக அமைச்சரவையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன். அதுமட்டுமின்றி, பெண்கள் குறித்து பேசியுள்ள அமைச்சர் பொன்முடி, தனது பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன்.