சென்னை :அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 49,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 9,59,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,03,013 பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவை பொறுத்த வரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை காக்கும் பொருட்டு 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டு, அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி கடைகள் வழக்கம் போல் இயங்கும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால் ஊரடங்கு உத்தரவு தற்போது 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடைகளின் நேரம் காலை 6 மணி முதல் 2.30 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 144 தடை உத்தரவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் வருமானமின்றி கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை வைத்து ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள மீதமுள்ள நாட்களை தள்ள வேண்டியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்களுக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ளது, மக்களை இந்த சுமையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை பட்டியலை அரசே வெளியிட்டு, இந்த விலை பட்டியல் அதிகமாக பொருட்கள் விற்பவர்கள் குறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் மக்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்க வழிவகை ஏற்படுத்தி, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் இருக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.