சென்னை : சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவை கொண்டாட்டத்தை யொட்டி, கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் சமூக சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இக்கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் திருமதி மேரி கிளப் வாலா ஜாதவின் நினைவைப் போற்றும் வகையில் எம்.சி.ஜே. நினைவுச் சொற்பொழிவு மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.

‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இந்திய நாட்டின் முன்னாள் பிரதிநிதியான கோபாலன் பாலகோபால் (இ.ஆ.ப., ஓய்வு) குழந்தைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்காக வரையறுக்கப்பட்ட கொள்கைகளையும் எளிமையாக விளக்கினார்.
சமூகப்பணிக் கல்விக்கான சரணாலயமாக விளங்கும் இக்கல்லூரி தன் எழுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. சேவை நோக்கத்தில் இயங்கும் சென்னை, அஞ்சல் துறையின் இயக்குநர் கே. சோமசுந்தரம் உறையை வெளியிட கல்லூரித் தலைவர் கே.ஏ. மேத்யூ, (இ.ஆ.ப. ஓய்வு) பெற்றுக் கொண்டார். அப்போது எழுந்த மாணவர்களின் கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
கல்லூரி முகப்பில் கம்பீரமாகத் தோன்றும் நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் முத்துக்குமார் தாணு, கல்லூரி நிதி இயக்குநர் ஜான் ஜக்ரியா, கல்லூரிப் புல முதன்மையர் முனைவர் ஆர். சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.