ஜெய்பீம்! சக மனிதனுக்கு காவல்துறையால் அதிகாரவர்கத்தினரால் இழக்கப்படும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிருக்கிறார்கள். “மனித உரிமை” என்ற வார்த்தைக்கு உயிர்ப்பினை தந்திருக்கிறார்கள் படகுழுவினர். இதை சமூக சினிமா என்பதை விட சமூக சினம் என்றே குறிப்பிட வேண்டும். ஜெய்பீம் அனைவருக்குமான முழக்கம்!

ஒரு படம் என்னவெல்லாம் நம்மை செய்யும்? சாப்பிடவிடாமல், தூங்கவிடாமல், கண்ணீர் கண்களில் பெருக்கெடுக்க, கோவம் தலைக்கேற, அதிகார வர்க்கத்தை நான்கு கேள்வி கேட்க இப்படி இன்னும் நிறைய செய்ய வைக்குமா?

#ஞானவேல் இயக்கிய #ஜெய்பீம் திரைபடம் கண்டிப்பாக செய்யும்.

1995 ல் நீதியரசர் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது, மனித உரிமைக்காக அவர் வாதாடிய ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இருளர்களுக்கு நடந்த அநீதி ஒன்றிற்கு சந்துரு அவர்கள் வழக்காடி நீதியை நிலைநாட்டிய உண்மை சம்பவம், திரையில் வரலாறாக மாறியுள்ளது.

முதல் காட்சியே உங்களை உலுக்கிவிடும். கேட்பதற்கு நாதியற்ற ஒரு கூட்டம், அவர்களுக்காக யாரும் பேச வராத போது,ஏற்கனவே பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவித்து, விடுதலையாகி சிறை வாசலை தாண்டுவதற்கு முன்பே, அவர்களை வேறு பல பொய் வழக்குகளில் சிறையில் தள்ளும் கொடூரம். பயங்கரம். பார்க்கும் போதே கதிகலங்கும் நமக்கு, அதை அனுபவிக்கும் அந்த மக்களுக்கு யார் துணை?

இப்போது இத்தனை ஊடகங்கள், சமூக வலைதளங்கள், அமைப்புகள் என பலமாக இருந்தபோதே கடந்த ஆண்டு தூத்துக்குடியில் தந்தை மகன் சிறை (சித்திரவதை) மரணத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, 1995 ல் காவலர்களின் சித்ரவதைகளை நினைத்துக் கூட நாம் பார்க்க முடியாது.

படத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை. ஆனால் காட்சிகள் ஒவ்வொன்றின் பாதிப்பிலிருந்தும் மீள முடியவில்லை

1. வீட்டில் பாம்பு பிடிக்கும் போது கீழே கிடக்கும் நகையை எடுத்துக் கொடுக்கும் போது, அவரை வீட்டு பெண்மணி பார்க்கும் அந்த பார்வை….

2. படிப்பதற்காக சாதி சான்றிதழ் கேட்கும் போது அரசு அதிகாரியின் ஏளனப் பேச்சு…

3. வாக்காளர் அடையாள அட்டை கேட்கும் போது உன்னிடம் வந்து ஓட்டு கேட்கனுமா என்ற சாதி வன்மம்…

4. இருக்கும் வீட்டை எரித்துவிடுவேன் என சாதரனமாக பேசும் வசனம்….

5. செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லும் காவலர்களின் அரக்கத்தனம்…

6. பழங்குடியினர் தானே என அரசு வழக்கறிஞர் பேசும் தொனி…

7. காந்தி இருக்கார்; நேரு இருக்கார்; அம்பேத்கார் எங்கே என கேட்கும் தருணம்….

8. மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததும் காவலர்கள் செங்கேனியிடம் பணியும் தருணம். அவர் ஜீப்பில் ஏறாமல் நடந்து செல்லும் மிடுக்கான நடை…

9. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் எனச் சொன்னாலும் எங்க வழக்கறிஞரை கேட்காம எதையும் செய்ய மாட்டேன் எனக் கூறி அதன் பிறகு பேசும் வசனம்…

10. சந்துரு – பெருமாள்சாமி பேசும் வசனங்கள்….

11. பெருமாள்சாமியிடம் எப்படி பொய் வழக்கு போட்டார்கள் என பழங்குடியினர் பேசும் இடம்…

12. சந்துரு செங்கேனியின் குழந்தை படிக்கும் ஆர்வத்தை கண்டு அந்த குழந்தையை பார்க்கும் அந்த பார்வை.

இப்படி பல காட்சிகள் நம்மை கை தட்டவும் வைக்கின்றது. சிந்திக்கவும் வைக்கின்றது.

திரையரங்கில் வந்திருக்க வேண்டிய அருமையான திரை படம் அமேசான் பிரைமில் வந்துள்ளது.

இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்களது நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

திரைபடத்தை தயாரித்த சூர்யா அவர்களுக்கும் & இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

இன்னும் இருளர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களின் இருப்பிடத்திற்காகவும் படிப்பிற்காகவும் அரசு அலுவலக வாசலின் கதவை தட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

சாதி களைவோம். மனிதம் காப்போம்! சக மனிதனை மனிதனாக மதிப்போம்!!!!