சென்னை:தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 652 ஆக உள்ளது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் கொடிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இப்படி அதிகரித்து வரும் கொரோனா தொற்றை , தடுப்பு பணியில் பணியாற்றி வரும் மருத்துவ துறை ,போலீசார், உள்ளாட்சி துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் இரவு பகல் பாராமல் மக்களை காக்கும் பொருட்டு திறம்பட செயலாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களின் பணியை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் குப்பைகள் தேங்காமல் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து வருகின்றனர். அதே போன்று மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தூய்மை பணியாளர்கள் ஆயிரகணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களை அழைத்து வரவும், அழைத்து செல்லவும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த போதிலும், இந்த தூய்மை பணியாளர்களை குப்பைகள் கொண்டு செல்லும் சிறு வாகனங்களில் வீடுகளிலிருந்து அழைத்துவரவும், மீண்டும் கொண்டு சென்று விடவும் பயன்படுத்தப்படுகிறது.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென அரசு தொடர்ந்து கூறி வரும் போதும், திறந்தவெளி சிறிய வாகனங்களில் தூய்மை பணியாளர்களை அழைத்து வரும் காட்சி வேதனைஅளிப்பதாக உள்ளது. குறுகிய சாலைகளில் பணிகளை இந்த தூய்மை பணியாளர்கள் மேற்கொள்வதால், இப்பகுதிகளில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக குப்பை அள்ளும் வாகனங்களில் கும்பல் கும்பலாக தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தூய்மை பணியாளர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மினி பஸ்களில் அழைத்து வந்து பணி முடிந்து மீண்டும் வீடுகளுக்கு மினி பஸ்களிலேயே அனுப்பி வைக்க வேண்டுமென அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்.