தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த
கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை !
சென்னை : மே, 14
கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் இன்னோகாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சம்பந்திநல்லூர் கிராமத்தில் வசிக்கும் 70 விவசாய குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் இக்கிராமத்தில் உள்ள 22 முதியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்..கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கால் கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக விவசாயத்தை மட்டுமே பெரிதும் நம்பியுள்ள கிராமங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
இதை கவனத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் எங்களது பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மூலம் ஏழை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ தீர்மானித்தோம். எங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாத்தா மொட்டை என்கிற ஆறுமுகம் அவர்களின் சொந்த கிராமமான “சம்பந்திநல்லூர்” கிராமம் பொருத்தமாக அமைந்தது.
விவசாயப்பொருட்களை விளைவித்து போதிய வாகன வசதி இல்லாததால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பொருளுதவி செய்வதைக்காட்டிலும், பணமாக வழங்கினால் அவர்களின் பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதால்தான் பணமாக வழங்கினோம்.இதை நாங்கள் பெருமையாக உணர்கிறோம் என்றனர்.
இந்த பொதுச்சேவையில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் இன்னோகாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளான சுரேந்திரன், மாதேஷ்அஜய், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.