கொரோனா வைரஸ் தாக்குதல்களை முறியடித்து வரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து மக்கள் சேவை செய்து வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு டி.யூ.ஜே சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தங்களின் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் மருத்துவர்கள் துப்புரவு தொழிலாளர்கள் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் களத்தில் இரவு பகல் பாராது அரசின் கடுமையான முயற்சிகளை மக்களுக்கு கொண்டு சேர்த்துக்கொண்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் 50 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு, தற்காப்பு உபகரணங்கள் மற்றும் தலைமை செயலக நிருபர்கள் முதல் தாலுகா நிருபர்கள் வரை தற்போது உள்ள சூழலில் குறைந்தபட்சம் உடனடியாக 10,000 ரூபாய்யாவது குடும்ப நல நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இதை மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும் என்று டி.யூ.ஜே சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பத்திரிகையாளர்களின் எந்த ஒரு ஞயாயமான கோரிக்கைகளையும் ( நல வாரியம், தனி பாதுகாப்பு சட்டம், தாலுகா அளவில் பணியாற்றி வரும் நிருபர்களுக்கு அரசு அக்ரிடேஷன் உட்பட பல….) நிறைவேற்றப்படாத நிலையில் குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையில் இதையாவது இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் இந்த ஆண்டும் வெறும் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து உள்ளோம் என்பதை புரிந்து கொள்ளுகிறோம்.
பணி பாதுகாப்பும் இல்லை, தற்போது உயிர் பாதுகாப்பும் இல்லை என்ற நிலையில் தமிழகத்தில் 80 % பத்திரிகையாளர்கள் இருந்து வரும் அவலம் தொடர்கிறது.
எனவே குறைந்தபட்சம் அரசு இந்த சூழலிலாவது பத்திரிகையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.